வேலூர்: வேலூர் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்டம் முழுக்க ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதன்படி, இன்று (டிச.22) வேலூர் தொகுதியில் நடைபெற்ற முகாமில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்றார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் நலன் கருதி, இந்த தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். அதன்படி, ஏற்கனவே 90 முகாம்கள் மூலம் 75 ஆயிரம் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை செய்து முடித்துள்ளோம்.
தொடர்ந்து சனிக்கிழமை 6 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மொத்தம் 300 மருத்துவ முகாம்கள் மூலம், 2 லட்சம் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்திட முடிவு செய்துள்ளோம்.
இதேபோல், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 120 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாமை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடியிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருப்பது பாஜகவின் பழிவாங்கும் முயற்சியாக கருத முடியாது. ஏனென்றால், இந்த வழக்கு மத்திய அரசின் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ தாக்கல் செய்த வழக்கு அல்ல. தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட வழக்கு தொடர்பானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கனமழையால் சென்னை உள்பட நான்கு வடமாவட்டங்களும், அதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 தென்மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். அத்தகைய கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சரிவர செய்யத் தவறியதே, தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு காரணம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்ம ஸ்ரீ விருதை திருப்பி ஒப்படைப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!