முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் தனித்தனியே வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்துவருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் முருகன் தங்கியிருந்த அறையிலிருந்து ஆண்ட்ராய்டு செல்ஃபோன், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக முருகனை இன்று சிறைக்காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர். பின்னர் நீதிபதி நிஷா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து வழக்கு விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து முருகன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறையில் உண்மையாகவே என்னை தனிமைப்படுத்தியுள்ளனர். எனது உணவை எனக்குத் தரவில்லை. புரட்டாசி மாதம் 45 நாள்கள் நான் விரதம் இருப்பதால் பழம் மட்டும் சாப்பிட்டுவந்தேன். அதுவும் எனக்குத் தரப்படவில்லை. எனது பரோலை தடுக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்'' என்றார்.
தொடர்ந்து, சிறையில் நீங்கள் செல்ஃபோன் பயன்படுத்தியது உண்மையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "சிறை அலுவலர்கள் நினைத்தால் யார் மீதும் எப்படி வேண்டுமானாலும் பழிபோடலாம். சிறை முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் செல்ஃபோன் பயன்படுத்தவில்லை.
என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. குளிக்க முடியாமல், துணி துவைக்கவிடாமல் எதுவும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். 14ஆவது நாளாக நான் உண்ணாவிரதம் இருக்கின்றேன். அதையே மறைக்கிறார்கள். நான் முதலமைச்சருக்கு அளித்த மனுவை நான்கு நாள்களாக அனுப்பாமல் வைத்துள்ளனர். எனக்கு வெள்ளை தாள் கூட தர மறுக்கிறார்கள்'' எனக் சிறை அலுவலர்கள் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். முருகன் மனைவி நளினி சமீபத்தில்தான் தனது மகள் திருமணத்துக்காக பரோலில் வெளிவந்துவிட்டு மீண்டும் சிறை சென்றார்.
இந்தச் சூழ்நிலையில் முருகன் தன்னை சிறை அலுவலர்கள் சித்ரவதை செய்வதாகப் புகார் கூறியிருக்கும் சம்பவம் வேலூர் சிறைத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நளினி உண்ணாவிரதம் குறித்து பரபரப்பு தகவல்கள்!