வேலூர்: Omicron News: ஒமைக்ரான் தொற்று ஒழிப்பு மற்றும் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி இன்று (டிசம்பர் 22) மாலை வேலூரில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியின் போது வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சாலை ஆகியப் பகுதிகளில் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்தப் பேரணியில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மருத்துவத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒமைக்ரான் தொற்று
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஒமைக்ரான் வைரஸ் ஒரு மரபியல் மாற்றம் அடைந்த வைரஸ்.
உலகில் 98 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இந்த வைரஸ் மூன்று மடங்கு தீவிரமடைந்து வேகமாகப் பரவக்கூடிய வைரஸ். தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நபரும் அவருடைய தொடர்பில் இருந்த மற்ற நபர்களும் நல்ல முறையில் உள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பயப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 95 லட்சம் பேர் இரண்டாம் தடுப்பூசி போடவில்லை.
18 வயது முதல் 44 வயது வரை உள்ள 68 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை. 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 30 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 43 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை.
தடுப்பூசி
தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக தொண்டு நிறுவனங்கள், வருவாய்த் துறையினர், மருத்துவத் துறையினர், காவல் துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் மூன்றாவது இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் உள்ள நிலையில், இந்தியாவில் முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் இன்னமும் ஆர்வம் காட்டவில்லை.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது கரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் இல்லை.
கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. ஆனாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட ஒன்றிய அரசு அறிவித்தால் தமிழ்நாடு அரசு அதை முனைப்பாக செயல்படுத்தும். ஒமைக்ரான் பரிசோதனை ஆய்வகம் முதலமைச்சரின் ஆலோசனையின்படி டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: இன்றைய வானிலை நிலவரம்