வேலூர் கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளது. இப்பயிற்சிப் பள்ளியில் 1981ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், பெண்களுக்கும் காவல் துறையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன்முதலாக பெண் காவலர்களுக்கான தேர்வு நடத்தி, அதில் 1063 பேர் தேர்வு செய்து, வேலூர் கோட்டையில் உள்ள பயிற்சிப் பள்ளியில் பயிற்சி அளிக்க வழி செய்தார்.
அப்பள்ளிக்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் நேரில் சென்று பயிற்சி முடித்த பெண்களை ஊக்கப்படுத்தியுள்ளார். இவ்வாறு பயிற்சி முடித்துப் பணியில் இருந்த பெண் காவலர்கள் சிலர், ஓய்வு பெற்றவர்கள் சிலர் என அனைவரும் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் ஒன்று கூடி, தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக துணைத் தலைவர் காமினி கலந்து கொண்டு உரையாடினார். அத்துடன் தங்களுடன் பயிற்சிப் பெற்று வீரமரணம் அடைந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பெண் காவலர்கள் 39 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பொதுவாக பள்ளி, கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள்தான் இதுபோன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பள்ளி, கல்லூரி அனுபவங்களை நினைவுகூர்வதற்காக ஒன்று கூடுவார்கள். அந்த வகையில் தற்போது காவலர் பயிற்சிப் பள்ளியில் 39 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற பெண் காவலர்கள் ஒன்று கூடி, தங்களது பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இதையும் படிங்க: காவல் நிலையத்திற்கு களப்பயணம் சென்ற தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்கள்!