வேலூர்: காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு விழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பள்ளி கட்டடத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். இதே போன்று பள்ளிகுப்பம் அடுத்து அமைந்துள்ள மோட்டூரிலும் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு பள்ளி கட்டடத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “காட்பாடி தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்துகொடுத்து உள்ளேன். கிராமங்கள் தோறும் பள்ளிக் கட்டடங்கள் கட்டி கொடுத்தோம். தற்போது காட்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. பாலாற்று நீரை கொண்டு வந்தேன், காவிரி நீரையும் கொடுத்தேன். புதியதாக சிப்காட் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளோம், இவ்வளவும் செய்து உள்ளேன்.
காரணம் இந்த துரைமுருகன் குடியான விவசாயியின் மகன், நான் ஏர் ஓட்டி விவசாயம் செய்தேன், அண்டை கழித்திருக்கிறேன் வெண்டை ஒடித்திருக்கிறேன், கத்தரிக்காய் பறித்துகொண்டு கூடையில் வைத்து மூன்று மைல் நடந்தே விற்க எடுத்து செல்வேன். நான் விவசாயி என்பதால் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சராக இருந்த போது அவரிடம் பேசி விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பெற்று தந்தவன் இந்த துரைமுருகன். மக்கள் எனக்கு ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் வாழ்த்தினாலும் தூத்தினாலும் என் கடமையை செய்வேன்; காரணம் சமுதாயத்தில் மக்கள் முன்னேற வேண்டும் என நினைப்பவன் நான்” என்று பேசினார்
தொடர்ந்து, இந்த விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோருக்கு கட்சி சார்பாக, விழா முடிந்தவுடன் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் தட்டு இலவசமாக கொடுக்கப்பட்டது. பொதுமக்களும் வரிசையாக நின்று தட்டுகளை பெற்றுச் சென்றனர். இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, விழாவிற்கு வந்ததற்காக தட்டு கொடுத்தார்கள் என கூறினர். பொதுவாக இது போன்ற விழாவிற்கு வருபவர்களுக்கு 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் வழங்கப்படும். ஆனால், இன்று அவர்களுக்கு தட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்; டிஜிபியிடம் பாஜகவினர் கோரிக்கை