வேலூர்: காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளும், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க தொகையையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அரசின் சார்பில் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதால், ஏழை எளிய பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத தகுதியான பெண்களுக்கு அடுத்த வாரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "வருமானவரித் துறை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீடுகளில் சோதனை செய்து வருகிறது. வருமான வரித்துறையின் சோதனையை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அமலாக்கத் துறை முன்பு ஆஜராக முடியாது என்று சொன்னது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "அதனை அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்றார். அதனைத் தொடர்ந்து, காவேரி ஒழுங்காற்றுக் குழு தண்ணீர் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது பாணியில் சிரித்த படி, "அவங்களுக்கு வேற வேலையே இல்லை" என்று கூறிச் சென்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் சோதனைக்கு காரணம் என்ன? முழுத் தகவல்!