வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த முத்துவின் மகன் சக்திவேல் (21). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு போனவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சக்திவேல் குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை தகர குப்பம் மலைப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக முத்துவின் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்தபோது நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சக்திவேல் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திம்மாம்பேட்டை காவல் துறையினர் இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இதில், சக்திவேல் தன் நண்பர்களுடன் மலைப்பகுதியில் வேட்டையாட சென்றதாகக் கூறப்படுகிறது. வேட்டையாடுவதில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக சக்திவேல் சுடப்பட்டரா? அல்லது வேறு யாரேனும் அவரை முன்விரோதம் காரணமாக சுட்டுக்கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.