வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். காத்தவராயன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவையடுத்து, குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியை காலியான தொகுதியாக அறிவித்த தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் நடத்தவும் திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்தது.
ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் காலியாக இருந்த அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தலாமா அல்லது பொதுத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தலாமா என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் ஆலோசித்து அறிக்கை அனுப்புமாறு வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (நவ. 06) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் "அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்தாக இடைத்தேர்தல் நடத்த வேண்டாம். பொதுத்தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை அறிக்கையாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அளிக்க உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ’திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி' - சத்திய பிரதா சாஹு