வேலூா்: சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு குடியாத்தம் நோக்கி வந்த வந்த அரசுப் பேருந்து, சேண்பாக்கம் ரயில்வே பாலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசுப் பேருந்து குடியாத்தம் நோக்கிச் சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுநா் பிரகாஷ் (41) ஓட்டி வந்துள்ளார். நடத்துநராக ரமேஷ் (49) இருந்துள்ளார். இந்நிலையில், பேருந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்காக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தை சுற்றிக் கொண்டு சென்றுள்ளது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி உள்ளது. இதில், இடிபாடுகளுக்குள் பிரகாஷ், ரமேஷ் மற்றும் முரளி என்ற பயணி ஆகியோர் சிக்கிக் கொண்டனர். மேலும், பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதையும் படிங்க: புதுமணத் தம்பதியினரின் புது வித முயற்சி.. ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்
இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் 8ஆம் நாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா; வெள்ளி வாகனத்தில் பிச்சாண்டவர் சாமி உலா!