வேலூர்: ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம், வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ், ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான நிதியுதவி வழங்கும் விழா நேற்று (செப்.16) நடைபெற்றது. விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம், நாராயணி பீடம், ஸ்ரீசக்தி அம்மா ஆகியோர் இணைந்து 700 மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
பின்னர் நீதிபதி வி.சிவஞானம் பேசியதாவது, “ஒருவருக்கு கல்வி வழங்குவது அன்னதானத்தை விட சிறந்ததாகும். அதனடிப்படையில், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா சாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு நிதியுதவியை வழங்கி வருகிறார்.
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சக்திஅம்மாவின் இந்த சேவையின் மூலம் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகியுள்ளனர். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆன்மீகமும் முக்கியம். அதற்கு நல்ல குருக்கள் தேவை” என்றார்.
தொடர்ந்து ஸ்ரீசக்தி அம்மா பேசியது, “யார் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளனர் அதை பொறுத்துத்தான் அடுத்த பிறவியில் அவரின் நிலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பிறக்கும் பல கோடி பேருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. இந்தியாவில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகமும், அமெரிக்காவில் செல்வமும், சூடான் உகாண்டா போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு வறுமையும் கிடைக்கிறது.
ஏன் ஒருவர் மட்டும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது அவரின் பாவ புண்ணியத்தின் கணக்கு. நாம் வாழ்க்கையில் செய்யும் நல்லதே நமக்கு திரும்ப கிடைக்கும். எதை கொடுக்கிறோமோ அதுவே புண்ணியமாக நமக்கு வந்து சேரும் . புண்ணியத்தால் தெய்வத்தின் அருள் கிடைக்கும். புண்ணியம் செய்வதற்கு தெய்வம் தரும் பரிசு அருள்.
அருள் இருந்தால் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி கற்கும் சந்தர்ப்பத்தை தெய்வம் அளித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல நிலையை அடைந்து மற்றவருக்கும் உதவி செய்தால் தெய்வத்தின் பரிபூரண அருள் உங்களுக்கும் கிடைக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தங்கக்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி, மேலாளர் சம்பத் மற்றும் மாணவ,மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தமிழர் பெருமை பறைசாற்றும் காளையர்கோவில்!