வேலூர்: "சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், நவல்பட்டு கிராமத்திலிருந்து, என் வீட்டில் கோபித்துக்கொண்டு நாற்பத்தி ஐந்து ரூபாயுடன் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு, வேலூர் ஓடி வந்து ஹோட்டலில் வேலை செய்தேன். என்னிடம் படிப்பு இல்லை" என்று நம்மிடையே பேசத் தொடங்கினார், 61 வயதான வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன்.
குழந்தைகளுக்கு கல்வியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் பலரும் பலவிதமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து தனித்துவமாக விளங்குகிறார், வேலூர் - விரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன். அப்படி என்ன செய்கிறார் தெரியுமா?
சத்தமில்லாமல் உதவி:
தினமும் ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக தேநீர், காபி, பால் போன்றவற்றை வழங்கி வருகிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க காயின் வழங்குகிறார். இவ்வாறாக குழந்தைகளை ஊக்குவித்து, கல்வி குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மகேஸ்வரனிடம் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்தின் சார்பில் பேசினோம்.
அப்போது மகேஸ்வரன் பேசியதாவது, 'நான் சரியாகப் படிக்காததால் எனது வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தேன். வீட்டை விட்டு ஓடி வந்து வேலூரில் உணவகத்தில் பணியாற்றினேன். பிறகு தேநீரைத் தயாரித்து கைகளில் வைத்துக்கொண்டு, வீதிவீதியாக சென்று, அதனை விற்பனை செய்தேன்.
'நான் பட்ட கஷ்டம் எந்த குழந்தைகளும் படக்கூடாது'
அதன் பிறகு சைக்கிளில் தேநீரை விற்பனை செய்தேன். தற்போது வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு பகுதியில் "மகேஸ் காபி பார்" என்ற ஒரு தேநீர் கடையை நடத்தி வருகிறேன்.
என்னுடைய தந்தை எனக்கு சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்திருந்தார். ஆனால், நான் கல்வியை சரிவர கற்கவில்லை.
எனது வாழ்க்கையில் ஏற்பட்ட சிறுவயதில் பட்ட சிரமங்கள் வேறு எந்த ஒரு குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு, தினமும் எங்களது கடைக்கு வரும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாகவே தேநீர், காபி, பால் போன்றவற்றை வழங்குகிறேன்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நான்கு சவரன் தங்க காயின் வழங்கி வருகிறேன்.
காமராஜர், அப்துல்கலாம் பிறந்த நாளில் ரூ.2 ஆஃபரில் டீ, காபி, பால்
பள்ளிகளுக்குச் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் பிறந்தநாட்களில் என் கடைக்கு வரும் அனைவருக்கும் 2 ரூபாய்க்கு தேநீர், காபி, பால் போன்றவற்றை வழங்கி கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
பலரும் காமராஜரை மறந்து விட்டனர். நான் கொடுக்கும் அந்த இரண்டு ரூபாய் காபியிலாவது அவரை நினைவு கூற வேண்டும் என்கிற எண்ணத்தோடு இதனை செய்து வருகிறேன்.
மாலையில் இலவச டிபன் வழங்கும் சேவை
20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, எனது கடையில் இலவசமாக டிபன் வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
அதேபோல், தினமும் 300 பேருக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாலை 5 மணிக்கு மேல் இலவசமாக டிபன் வழங்கி வந்தேன். தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக, என்னால் இச்சேவையை சரிவர செய்ய முடியவில்லை.
இருப்பினும் அடுத்த ஆண்டிலிருந்து, இந்த சேவையை மீண்டும் தொடங்க உள்ளேன். தினமும் பொங்கல், கிச்சடி, உப்புமா, புளி சாதம், லெமன் சாதம், புதினா சாதம் போன்றவற்றை இலவசமாக வழங்குகிறேன்' என்கிறார் புன்னகையுடன்.
வாடிக்கையாளரை உறவினர் போல பார்க்கும் மகேஸ்வரன்
மகேஸ் காபி பாரின் வாடிக்கையாளர் சதீஷ் என்பவர் கூறுகையில், 'நான் இந்த கடைக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வாடிக்கையாக வந்து செல்கிறேன். அண்ணன் (மகேஸ்வரன்) எங்களை ஒரு வாடிக்கையாளராகப் பார்க்க மாட்டார்.
என்னை மட்டுமின்றி கடைக்கு வரக்கூடிய அனைவரையும் அவரது குடும்ப நண்பர்களைப் போன்று பார்க்கக் கூடியவர். மிகவும் எளிமையானவர். ஒவ்வொரு ஆண்டும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இவருடைய வருமானத்தின் ஒரு பகுதியை செலவு செய்து, அதை பணமாகவோ அல்லது நகையாகவோ பரிசாக வழங்கி வருகிறார்.
சேவையைக் கருத்தில் கொண்டே இந்த தேநீர் கடையை நடத்தி வருகிறார். தன்னுடைய தேவைக்கான லாபத்தை எடுத்துவிட்டு, மீதமிருக்கும் அனைத்தையும் பொது சேவைக்காக அர்ப்பணிக்கிறார்.
இல்லாதவர்கள் யார் உதவி என்று வந்தாலும் இல்லை என்று சொல்வதில்லை. அரசு அதிகாரிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும், நாங்கள் பார்த்தவரை இவர் செய்த அளவில்கூட வேறு யாரும் உதவிகளை செய்தது கிடையாது' என்கிறார் பெருமையுடன்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் - ஸ்டாலின் உறுதி