வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (36). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று இரவு விஜயராகவபுரம் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென செல்வராஜை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முட்பட்டார். உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடிய செல்வராஜ் பின்னர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சாலையைக் கடந்து அருகிலுள்ள வேலூர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் அருகே சென்றார்.
அப்போது, அவரை துரத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர் செல்வராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் செல்வராஜ், ஆவின் வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து கூட்டம் சேர்ந்ததால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர், செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், செல்வராஜ் அவரது மாமனாரை கொலை செய்தது தொடர்பாக ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செல்வராஜ் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது பெண் ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் செல்வராஜ் ராணுவத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இதன்பின்னர் செல்வராஜ் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.