வேலூர்: வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு நாள்தோறும் சென்னை புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படுகிறது. அதேநேரம், இந்த மின்சார ரயில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும். இந்த நிலையில், நேற்று (ஜூன் 27) மாலை 5.35 மணிக்கு வேளச்சேரியில் இருந்து இந்த மின்சார ரயில் வழக்கம்போல் புறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தாமல், அரக்கோணத்தில் வந்து ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆத்திரம் அடைந்த நிலையில், இன்ஜின் ஓட்டுநர் ஜோஸ்வா மற்றும் கார்டு தியாகராஜன் ஆகியோரிடம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது பயணிகள், ‘உங்களுக்கு எப்படி சிக்னல் கிடைத்தது? சிகப்பு சிக்னல் எரிந்துதானே இருக்கும். எந்த ஞாபகத்தில் நீங்கள் ரயிலை இயக்கினீர்கள்? கார்டும் சிக்னலை பார்க்கவில்லையா? இது போன்று ரயிலை இயக்கினால் விபத்து நேரிடாதா?’ என இன்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்டிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு இன்ஜின் டிரைவர், ’ஞாபக மறதியில் விரைவு மின்சார ரயில் என்றும், புளியமங்கலத்தில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் இல்லை என நினைத்து வேகமாக இயக்கி விட்டேன். என்னை மன்னிக்கவும்’ என தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு பயணிகள் - இன்ஜின் டிரைவர் இடையேயான கடும் வாக்குவாதத்தால் ரயில் அரக்கோணத்தில் இருந்து 20 நிமிடங்கள் காலதாமதமாக திருத்தணிக்கு புறப்பட்டுச் சென்றது. மேலும், சிக்னலைக் கூட கவனிக்காமல் ரயில் இன்ஜின் ஓட்டுநர் எப்படி ரயிலை இயக்கினார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
43943 என்ற எண் கொண்ட இந்த மின்சார ரயில் மாலை 5.35 மணிக்கு வேளச்சேரியில் இருந்து புறப்படுகிறது. இதனையடுத்து பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமைவழிச் சாலை, மந்தைவெளி, மயிலாப்பூர், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை பூங்கா டவுண், சென்னை கோட்டை, சென்னை கடற்கரை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை, புட்லூர், திருவள்ளூர், ஈகாட்டூர், கடம்பத்தூர், பனம்பாக்கம், மானூர், திருவலங்காடு, மோசூர், புளியமங்கலம், அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று இறுதியாக திருத்தணியைச் சென்றடையும்.
இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த மேற்கு வங்க நபர் கைது.. ஆம்பூரில் நடந்தது என்ன?