வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே அனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனது வீட்டிற்கு மும்முனை மின் இணைப்பு பெறுவதற்காகவும், பழைய மீட்டரை மாற்றவும் வாலாஜா மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளரான சரவணன் மும்முனை இணைப்பு கொடுக்க லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி தன்னிடம் பணம் இல்லை என்றும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் தந்தால் மட்டுமே மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்படும் என சரவணன் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்ற பாலாஜி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூறிய ஆலோசனைப்படி மீண்டும் சரவணனை தொடர்புகொண்டு தன்னால் ரூ. 2500 மட்டுமே கொடுக்க முடியும் என கூறியுள்ளார். அதற்கு அவரும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அவரும் அந்த பணத்தை மின்வாரிய ஆய்வாளரான சரவணனிடம் கொடுக்க முற்பட்டபோது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.