வேலூர் மாநகர அண்ணா சாலையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி வெண்கல சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "வேலூர் என்பது வீரம், விவேகம், சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது. இப்படியான ஊரில் அண்ணா, கலைஞர் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. கொள்கையில் மாறுபாடு இருந்தாலும், அதை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை. ஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர் ஓ.பி.எஸ். ஆனால் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் திமுகவினரான எங்களை பார்த்து ஓபிஎஸ் சிரித்ததால் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தபோது சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. அதன் பின்னர் ஊர்ந்து முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. இதை சொன்னால் அவருக்கு கோவம் வரும். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சசிகலாவை போல தண்டனை பெற்றிருப்பார்.
நான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது குறித்து கேட்கவில்லை. ஆனால் ஒன்றை கேட்கிறேன். அவர் 'ஊர்ந்து வந்தது உண்டா இல்லையா?' அதற்கு மட்டும் பதில் சொல்லுங்க எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார் என்ற அறிக்கையை தவிர வேறு உருப்படியான அறிக்கை எதுவும் வரவில்லை. ஜெயலிதா மரணத்தை கண்டுபிடிக்க யோக்கியதை இல்லை; அப்படி இருக்க அவரது நினைவு இல்லத்தை திறக்க என்ன யோக்கியதை இருக்கு?.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் தீர்வு எட்டவில்லை. ஆணையம் 10 முறை அழைத்தும் ஆஜராகாதவர் ஓபிஎஸ். அதிமுக டெப்பாசிட் வாங்க கூட முடியாத நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் அடிப்படை பிரச்னை தீர்க்கப்படும். அதனால் தான் மக்கள் கொடுத்த மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி அந்த சாவியை என்னுடைய சட்டை பையிலேயே வைத்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை நானே திறந்து 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன். இது அண்ணா மற்றும் கலைஞர் மீது ஆணை” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலை, தமிழர்களின் உணர்வு சார்ந்தது - அமைச்சர் ஜெயகுமார்!