இன்று நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்தி 555 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 715 இடங்களில், மொத்தம் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், தொரப்பாடி சாலையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கே வாக்காளர்களை வரவேற்கும் வகையில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு, சந்தனம் பன்னீருடன் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் காலை 7 மணிக்கு மாதிரி வாக்குச்சாவடியில் வந்து வாக்களித்தார். அதைத்தொடர்ந்து, மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக காவல்துறையினர் 3,500 பேர், மத்திய துணை ராணுவப் படையினர் உள்பட மொத்தம் 5,500 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளை 215 நுண் பார்வையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மையத்தில் அசம்பாவிதத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.