வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட நேதாஜி மார்க்கெட், மண்டித்தெருவில் அரிசி மண்டி, காய்கறி, தேங்காய் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இன்று ( ஜூன்14) நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து வகை கடைகளும் மூடப்பட்டு, மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வேலப்பாடியைச் சேர்ந்தவர், வேலூர் மண்டித்தெருவில் அரிசி மண்டி வைத்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரது அரிசி மண்டியில் பருப்பு எண்ணெய் வகைகளும் மொத்த விற்பனை செய்வதால், இவரது கடைக்கு ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தொடர்ந்து சரக்கு வந்துள்ளது.
அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர்களுடன் அரிசி மண்டி வைத்திருந்தவர் தொடர்பில் இருந்துள்ளார். ஒருவேளை அவர்களிடமிருந்து கரோனா பரவி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
அதேசமயம் எந்த ஒரு பயணத் தொடர்பும் இல்லாத நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை மற்றும் தேங்காய் கடை வைத்துள்ள இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கடைக்காரர்களுடன் தொடர்பில் மற்றும் அருகாமையில் உள்ள கடைக்காரர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கடைகளுக்கு வந்து சென்றவர்கள் தாமாக முன்வந்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சோதனை செய்துகொள்ளும் படியும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது