வேலூர்: சத்துவாச்சாரி காவல் நிலையத்தில், வேலூர் மாநகராட்சி 24வது வார்டு உறுப்பினர் சுதாகர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகப் பேசுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் தகவல் அறிக்கையில், "சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் என்பவர் கடந்த 10ம் தேதி அன்று பணியிலிருந்தபோது, அங்கு வந்த 24வது வார்டு திமுக உறுப்பினர் சுதாகர், அவருக்குச் சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையை, கிராம உதவியாளர் எனது அனுமதி இல்லாமல் எப்படி புகைப்படம் எடுத்தார் எனச் சத்தம் போட்டுள்ளார்.
அதற்கு, தங்கள் செங்கல் சூளைக்கு அனுமதி இல்லாமல் மண் எடுத்துச் செல்வதாக வந்த புகாரையடுத்தே விசாரிக்கச் சொன்னேன் எனக் கூறியதற்கு, வருவாய் ஆய்வாளரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் வருவாய் ஆய்வாளர் யுவராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.