வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ வேலூர் தேர்தல் நின்றதற்கு காரணம் திமுகவினர் தான். அக்கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஒரு அவமான சின்னம். திமுகவின் அடிப்படை பதவியில் இல்லாத ஒருவரை மக்களவை வேட்பாளராக நிறுத்தியவர் துரைமுருகன். ஏன் மற்றவர்கள் எல்லாம் திமுகவிற்காக உழைக்கவில்லையா சுயநலத்திற்காக இயங்கும் கட்சி இது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றியவர்கள் திமுகவினர். நெல்லையில் மேயர் படுகொலைக்குக் காரணம் யார் என்று தேடும் போது திருடன் விட்டிலேயே இருப்பது போல் திமுகவினர் தான் அப்படுகொலையைச் செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு உற்ற நண்பனாக விளங்குபவர் கேப்டன். அம்மாவும் கேப்டனும் சினிமாவில் நடித்தவர்கள் ஆனால் மக்களிடையே நடிக்காதவர்கள். சிலர் சினிமாவில் நடிக்காமல் மக்களிடையே நடித்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறுகின்றனர். இதனால் வேலூர் மக்கள் மாபெரும், மாற்றத்தைத் தர ஓர் வாய்ப்பு அமைந்திருக்கிறது அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.”, என்றார்.