வேலூர்: சென்னையைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவருக்கு முருகன் என்பவருடன் திருமணமாகி, 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்த விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பரமேஸ்வரி குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், 2ஆம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறுவன் வீட்டில் அதிகமாக சேட்டைகள் செய்வதால், இவரின் 2வது கணவர் குழந்தையை நம் வீட்டில் இருக்க வேண்டாம், வேறு யாரிடமாவது ஒப்படைத்து விடு என கூறியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, சிறுவன் விரிஞ்சிபுரம் அடுத்த கருகம்புத்துார் பகுதியில் உள்ள முருகனின் தங்கை மஞ்சு வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், அச்சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி கொணவட்டம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே, காலில் தீக்காயத்துடன் சிறுவன் சுற்றி வந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிறுவன் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இருதரப்பும், சிறுவனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். சிறுவன் தனக்கு தெரிந்த
ஊர்களின் பெயர்களை எல்லாம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கார் மூலம் சுமார் 150 கிலோ மீட்டர் துாரத்திற்கு மாவட்டம் முழுவதும் சிறுவனின் வீட்டைத் தேடி அதிகாரிகள் அலைந்துள்ளனர்.
இறுதியாக கருகம்புத்துார் அருகே கார் வந்தபோது, “இங்கே தான் இங்கே தான்” என அச்சிறுவன் அலறி உள்ளார். உடனே அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது, சிறுவன் மஞ்சு வீட்டில் வளர்ந்த குழந்தை என்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அதிக சேட்டை செய்ததால் சிறுவனுக்கு சூடு போட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஞ்சு, தனக்கு சிறுவனை வளர்க்க விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவனின் தாய் பரமேஸ்வரியும் குழந்தையை ஏற்றுக் கொள்ள தயராக இல்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சிறுவன் காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மஞ்சுவிடம், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறனர்.
இதையும் படிங்க: டேட்டிங் செயலி மூலம் சீட்டிங்.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது!