வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்தலி அடுத்த சொக்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (35). இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு இவர் கந்தலி பகுதியிலிருந்து நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சொக்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி, ரமேஷ் மற்றும் திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து முனியப்பனை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரை திருப்பத்தூர் அருகேயுள்ள கிடங்கு ஒன்றில் வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனையறிந்த முனியப்பனின் சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணேசன் முனியப்பனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரிக்கையில் மணி, ரமேஷ் இருவருக்கும் முனியப்பனுடன் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது. எனவே காவல் துறையினர் தலைமறைவாகியுள்ள கார்த்தி, ரமேஷ், மணி ஆகியேரைத் தேடி வருகின்றனர்.