ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை பிரபலம்.
இதையும் படிங்க: மீண்டும் உளறி சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் - அதிமுகவினர் அதிருப்தி
அந்த வரிசையில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவை விமர்ச்சிப்பதாக நினைத்து எதையோ ஒன்றை கூற, அது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வேலூர் மாவட்ட நூலக அலுவலகத்தில் இன்று தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரதிபலித்துள்ளதாகவும், ஏனென்றால் கடந்த தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுகதான் வெற்றி பெற்றார்கள் எனவும் கூறினார்.
அப்போது திமுக கொடுத்த வாக்குறுதியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதை சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது என்றும் கூறினார். அதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது இதைத்தான் அமைச்சர் வீரமணி தவறுதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறி முடித்ததும் அருகிலிருந்த கட்சி நிர்வாகி ஒருவர் காஷ்மீர் அல்ல கன்னியாகுமரி என்று அவருக்கு எடுத்துக் கூறினார். அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. இதையும் அமைச்சர் வீரமணி தவறுதலாக நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பிரதிபலித்துள்ளதாகக் கூறியிருந்தார். அமைச்சரின் இதுபோன்ற உளறல் பேச்சு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், அலுவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: செய்தியாளர்களிடம் உளறிய அமைச்சர் -பரபரப்பு