வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேலூர் சைதாப்பேட்டை பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துரைமுருகன் மகனை லாரி ஏற்றிக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறுகிறார்கள்.
உங்களோடு இருந்தவர்கள் அந்த சதியில் ஈடுபட்டார்களா? அல்லது நீங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தீர்களே அவர்கள் அதில் ஈடுபட்டார்களா? அல்லது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள்; உங்களால் பழிவாங்கப்பட்டவர்கள் யாராவது இதனை செய்தார்களா என்று நீங்கள்தான் கண்டறிய வேண்டும்.
குற்றம் சுமத்துவதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? எதற்கு கற்பனையாக சொல்கிறீர்கள். மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக துரைமுருகன் சொல்கிறார். எங்களைப் பொறுத்தவரை ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாட்டோம்.
ஏற்கனவே, பணம் பதுக்கல் பிரச்னையில் தன்னுடன் இருந்தவர்களே காட்டிக் கொடுத்தார்கள் என்று துரைமுருகன் சொன்னார். ஆகவே, இந்த சதியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் காவல் துறையிடம் புகார் கொடுங்கள்.
தேவையற்ற அனுதாபங்களைத் தவிர்த்து மக்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளைக் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.