வேலூர்: திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது காட்பாடியில் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, “சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் முனியப்பன் (57). இவர், தனுடைய மனைவி பெரியநாயகி (43), மகள்கள் அபிநயா (29), அனுசுயா (22), உறவினர் சிவசுப்பிரமணியம் (34), அவருடைய மனைவி மகேஸ்வரி (32), மகன் கவி அன்பு ஆகியோருடன் சிவகங்கையில் இருந்து காரில் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்று உள்ளனர். பின்னர் தரிசனம் முடித்து விட்டு நேற்று அதிகாலை சிவகங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்து உள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி உள்ளது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே ஓடி வந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு உள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 7 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதன் பின் கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Coimbatore Accident: அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி!
மேலும், இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முனியப்பன் கார் ஓட்டுநரிடம், சித்தூர் மாவட்டம் குடிபாலா அருகே அதிகாலை காரில் வரும் போது தங்கி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்லலாம் என கூறியுள்ளார்.
அதற்கு கார் ஓட்டுநர் வேலூர் சென்று அறை எடுத்து தங்கி விட்டுச் செல்லலாம் என கூறி காரை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில்தான் காட்பாடி செங்குட்டை அருகே வரும்போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் தடுப்புச் சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
இதே போல், வேம்பத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முனைக்குளம் கிராமம் அருகே சருகனேந்தல் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் ஹரிவேலன் என்ற 7ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Marketa Vondrousova: சாதனை நிகழ்த்திய மார்கெட்டா: தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற வீராங்கனை!