திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் மாட்டுச் சந்தையும், காய்கறிச் சந்தையும் நடைபெறுவது வழக்கம். மாட்டுச் சந்தைக்கு புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், உழவர்களும் வந்துசெல்கின்றனர்.
நாளுக்கு நாள் மாடுகள் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதனை வாங்கவருபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிவருகிறது.
இந்நிலையில் மணப்பாறை வாரச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களும் வியாபாரிகளும் முகக்கவசம் அணியாமலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் உள்ளனர்.
சாலையில் செல்லும்போது மட்டும் முகக்கவசமின்றி வருபவர்களுக்கு ரூ.200அபராதமாக வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் சந்தைக்கு வருபவர்களைக் கண்காணிக்காதது ஏன் என சமூகநல ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் சந்தைக்கு வருபவர்கள் மூலம் கரோனா தொற்றின் பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சமூகநல ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.