108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான இன்று 'பகல் பத்து' வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தனுர் லக்னத்தில் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.
நீள் முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கம், அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள் 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். 8.15 மணிமுதல் அங்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
![vaikunda ekadasi festival starts in trichy srirangam temple](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-srirangam-festival-script-photo-tn10045_15122020095231_1512f_1608006151_630.jpg)
பின்னர் மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயிலில் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று பகல் பத்து உற்சவத்தை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையிலான அர்ச்சகர் குழுவினர் செய்தனர்.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி திருவிழா: ஆன்லைன் புக்கிங் மூலமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி