திருச்சி: போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு நேற்று நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஏற்கனவே இரண்டு, மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து, இன்று வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, 938 பேருந்துகள் இயங்கி வருகின்றன (நகர் பேருந்துகள் 438, புறநகர் பேருந்துகள் 500).
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மென்ட் மற்றும் புறநகர் கிளையில் பேருந்துகள் பெருமளவு இயங்க துவங்கி விட்டன. இரண்டு கிளைகளிலும் சுமார் 130 பேருந்துகளில் 110 பேருந்துகள் இயங்க தொடங்கி விட்டதாகவும், இன்று 90 சதவீத நகர் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டதால் அரசு பேருந்துகளும் குறைவாக இயக்கப்பட்டது. இன்று வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சி மாநகர் பகுதியில் தனியார் பேருந்துகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இன்று வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்க நிர்வாகி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”போக்குவரத்துறை அமைச்சர் தான் எங்களை போராட்டத்துக்கு தூண்டிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தாமல், அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்திற்கு முழுக்க அமைச்சரே காரணம்” என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: திருச்சி மத்திய மண்டலத்தில் 18% ஆகக் குறைந்த கொலை குற்றங்கள் - காவல்துறை தகவல்