திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா கடந்த டிச. 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பகல்பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கிவருகிறார். இந்நிலையில் இன்று (டிச. 21) ஸ்ரீரங்கம் பகல்பத்து ஏழாம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் நம்பெருமாள் முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல்பத்து, ராப்பத்து
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாள்களும், பிறகு பத்து நாள்களும் என பகல்பத்து, ராப்பத்து வைபவம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இந்த வகையில் பகல்பத்து வைபவத்தில் தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்.
7ஆம் நாளான இன்று (டிச. 21) காலை ஆறு முப்பது மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க புறப்பட்டார்.
இன்றைய சிறப்பு அலங்காரம்
பகல்பத்து 7ஆம் நாள் நிகழ்ச்சியில் கிருஷ்ணர் (நம்பெருமாள்) முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முத்து கிரீடம், புஜகீர்த்தி, ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசுமாலை, முத்துச்சரம் அலங்காரத்தில் புறப்பட்ட நம் பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதனால் மூலவரையும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்செய்தனர். இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.