திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தெற்கு ரயில்வே அனைத்து கோட்ட, கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடாச்சல பெருமாள் உள்பட ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட திருச்சி, சேலம், மதுரை, சென்னை ஆகிய 4 கோட்டங்களுக்கு 300 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம். ரயில்வே தண்டவாளம் அமைத்தல், கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறோம். தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இந்த நிலுவைத் தொகையை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்துவருகிறது. ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தபோது ஒப்பந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
தற்போது பொது பட்ஜெட்டுடன் இணைந்த பிறகு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த விஷயத்தில் ரயில்வே வாரியம் தலையிட்டு இறுதித் தொகையை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பெண்களால் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்!