கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. இதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் திருச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விற்பனையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதேபோல் திருச்சியின் பிரதான சந்தையாக விளங்கும் காந்தி சந்தை மற்றும் உழவர் சந்தைகள், 11 தற்காலிக சந்தைகளாக மாற்றியமைக்கப்பட்டது.
திருச்சி காந்தி சந்தையில் மொத்த வியாபாரிகள் மட்டும் வியாபாரம் செய்து வந்தனர். இருப்பினும் மக்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
கரோனா பரவ காந்தி சந்தை முக்கிய காரணமாக மாறத்தொடங்கியது. இதையடுத்து நேற்று முதல் "சேவ் திருச்சி" என்ற ஹேஸ்டேக் திருச்சி இளைஞர்களால் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இதன் காரணமாக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்திற்கு காந்தி சந்தையை மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு