பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டம் உள்பட மூன்று சட்டங்களுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி திமுக தலைமையில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விஎன் நகரில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைநகரம், ஒன்றியம், நகரம், பேரூர் வாரியாக விவசாயிகள், வார்த்தகர்களை பெருமளவில் பங்கேற்க செய்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, கம்யூனிஸ்ட் கட்சி இந்திரஜித், ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன், காங்கிரஸ், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.