திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பி.டெக் மாணவர்கள் ஒருங்கிணைந்து "திருமதி கார்ட்" என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியின் நோக்கம், மகளிர் சுய உதவி குழு பெண்கள், இல்லத்தரசிகள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் மற்றும் ஆர்கானிக் காய்கறிகளை செல்போன் செயலி மூலம் விற்று திருமதிகள் வெகுமதி அடைய உருவாக்கப்பட்டது.
இந்த செயலி குறித்த பயிற்சியானது, திருவெறும்பூர் அருகேயுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், ‘திருமதி கார்ட்’ செயலியின் ஒருங்கிணைப்பாளர் பிருந்தா தலைமையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடக்கவுள்ளது. இதுகுறித்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினிஷாஜி தாமஸ் பேசுகையில், மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளை இலகுவாக விற்பனை செய்வதற்கு ஏதுவாக இந்த செயலியை பி.டெக் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலியின் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள், இல்லத்தரசிகளின் தயாரிப்புகளை அடுத்த படிக்கு எடுத்துச் செல்ல உதவ வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின் இந்தத் திட்டம் வெற்றியடைய சுய உதவி குழுக்கள் தங்களது தயாரிப்புகளை "திருமதி கார்ட்" செயலியின் மூலம் விற்பனை செய்து முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.
மேலும், தற்போது கிராமப்புறங்களில் பல் துலக்கும் வேப்பங்குச்சியை கூட அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் ரூபாய் 600க்கு விற்று வருகின்றனர். எனவே காலத்திற்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும். இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப்பற்றி ஐந்து நாட்கள் பயிற்சியளிக்க உள்ளனர். இதன் மூலம் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இது பெரும் உதவியாக இருக்கும். இதுபோன்ற செயலியை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டுகள் என ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
அதன்பின் திருமதி கார்ட் செயலியின் திட்ட இயக்குனர் சரவணன் பேசுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புகளை எளிய வகையில் விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி, முதலில் மாவட்டம் பின்னர் மாநிலம் அதன்பின் உலகம் முழுவதும் விற்பனையை அதிகப்படுத்தும் என்றார்.
இதையும் படிங்க: ‘நீங்கள் வேறு மாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரி செயல்படுவேன்’ - எச்சரித்த ஆட்சியர்