திருச்சி: 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருமாலுக்குத் தொண்டுகள் செய்த திருமங்கை மன்னன், தன்னிடம் இருந்த பெரும் பொருட்களைச் செலவு செய்தார். தொடர்ந்து செய்வதற்கு, தன்னிடம் பொருள் இல்லாமல், வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதால், ஓம் நமோ நாராயணாய என்ற நாமத்தை உபதேசித்து, அவரை ஆட்கொண்ட வைபம்தான் வேடுபறி உற்சவம் என கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த டிச.12ஆம் தேதி அன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பகலில் பத்து உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, இந்த பகல் பத்து நிகழ்வில் பெருமாள் பல்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் பத்து உற்சவம் நிறைவு நாளன்று, பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7ஆம் நாளான நேற்று (டிச.29) பெருமாளுக்கு கைத்தல சேவை நடைபெற்றது.
இந்நிலையில், 8ஆம் நாளான இன்று (டிச.30) மாலை கோயிலின் 4ஆம் பிரகாரத்தில் உள்ள மணல்வெளியில், திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார்.
ராப்பத்து உற்சவத்தின் 10ஆம் நாளில் தீர்த்தவாரியும், ஜனவரி 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுத்துறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது. திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: வில்வித்தையில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஷீத்தல் தேவி.. எதற்காக தெரியுமா?