உலகம் முழுவதும் கரோனா நோய்ப்பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மே 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனாவைத் தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட செயல்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எலும்புக்கூடு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கரோனா தாக்குதல் கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கரோனா நோய் குறித்த அச்சம் இல்லாமல் திருச்சி மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் நடமாடி வருகின்றனர்.
இதனால், தன்னார்வலர் தாமஸ் மற்றும் திருவெறும்பூர் வட்டாரக் காவல் துறையினர் இணைந்து, எலும்புக்கூடு மூலம் இந்த நூதன விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தினர். திருவெறும்பூர் கடைவீதி, காட்டூர் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் எலும்புக்கூட்டை வைத்து, பொதுமக்களுக்கு கரோனா நோய் குறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் ஒருசேர ஏற்படுத்தினர்.
இதில் காவல் துறை உயர் அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : நீலாங்கரை குப்பம் பகுதி மக்களுக்கு உதவிய ஏடிஜிபி!