திருச்சி: பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், விமானத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம், கரன்சி நோட்டுகள் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
நேற்றைய முன்தினம் (மே 19ஆம் தேதி) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு, திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், விமான நிலையம் முழுவதும் அனைத்து பயணிகளிடம் தீவிர சோதனையில் அதிரடியாக ஈடுபட்டனர். இந்த சோதனையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர், 10 லட்சத்து 27ஆயிரத்து 530 ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பெண் பயணியிடம் இருந்த அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர்.
இந்தப் பெண் இதற்கு முன்பு கரன்சி நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா ? இவர் வைத்துள்ள பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானது தானா ? வேறு வழக்குகள் ஏதேனும், அவர்கள் மீது உள்ளதா? இவர்களுக்கு பின்புலமாக இருந்து யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக இவர் அமெரிக்க டாலர்களை கடத்தி செல்கின்றார்? சர்வதேச அமைப்புகளுடன் எதுவும் தொடர்பு உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள், அப்பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அந்த பயணியை, விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சமீபகாலமாக, திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள் , பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் தொடர்ந்து, பறிமுதல் செய்து வந்தபோதிலும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது, வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற சட்டவிரோதச் சம்பவங்கள் குறையும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளாக உள்ளது.
இதையும் படிங்க: திருச்சி சிவா எம்.பி.யின் மருமகன் மீது வழக்கு.. எதுக்கு தெரியுமா?