திருச்சி: சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து கிராமம், செங்கதிர் சோலை பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவக்குமார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மல்லியம்பத்து கிராமத்தில் உள்ள மயான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதை மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஸ்வரன் முயற்சியில் மீட்கப்பட்டது.
ஆனால் திடீரென ஊராட்சி நிர்வாகத்தால் மீட்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெயர்ப் பலகை, நில அளவுக் கற்களை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர்.
மயான நிலம் மீட்கப்பட்டதற்கு சிவக்குமார், ஊராட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபர்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக நேற்று (நவம்பர் 28) மாலை வீட்டிலிருந்த சிவக்குமாரிடம் இரண்டு பேர் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் சிவக்குமாரை இருவரும் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார். இதனால் பதறிப்போன இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அருகிலிருந்தவர்கள் சிவக்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இது தொடர்பாக பிரபாகரன் என்கிற மருதைராஜ், தீபக் அவர்களைத் தூண்டியதாக திமுக பிரமுகர் கதிர்வேல், ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா ஆகியோர் மீது சிவக்குமாரின் மனைவி மைதிலி புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞர் தலைமறைவு, மூவர் கைது