திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முருகனின் மனைவி நளினி, ஜெயக்குமார் மனைவி சாந்தி ஆகியோர் இன்று (நவ.14) நேரில் சந்தித்துப் பேசினர்.
அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, 'தற்போது முகாமில் உள்ளவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் அவர்களை விரைவாக முகாமிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்கிறேன் என்கிறார். நானும் என் கணவர் முருகனும் லண்டன் செல்ல விரும்புகிறோம்.
ஆனால், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் அது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. நமக்கு நல்லது செய்தவர்களை சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை, அதனால் தான் முதலமைச்சரை சந்திக்கவில்லை. முதலமைச்சர் எங்களுக்கானதைப் பார்த்து கொள்வார்.
கடந்த 16 ஆண்டுகளாக என் மகளை பிரிந்துள்ளேன், லண்டன் சென்று அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். முகாம் என்பது தற்போது சிறைபோல் உள்ளது. அதனால் அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும்.
சில மக்கள் எங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள். நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள், என் தாய்க்கு பெயர் வைத்ததே காந்தி தான். இந்திரா காந்தி இறந்த போதும் சரி, ராஜீவ் காந்தி இறந்த போதும் சரி நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம்.
அப்போது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிட கூடவில்லை, ஆனால் என்னை ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த பழியிலிருந்து மீண்டு வரவேண்டும். இந்த வழக்கிலிருந்து விடுதலையானால் கோயில்களுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டி உள்ளேன். அதை செய்வேன்.
ராஜீவ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது என எனக்குத் தெரியாது. வெளிநாடு செல்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என தான் நினைக்கிறோம்’ எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உணர்கின்றீர்களா என்கிற கேள்விக்கு, ’நீங்கள் எல்லாம் இருக்கும் போது (பத்திரிகையாளர்கள்) எனக்கு என்ன குறை. உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை’ என்று கூறினார்.
இதையும் படிங்க: மாணவியின் கனவை ஊக்குவிக்க தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்!