திருச்சி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 46 நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தொடங்கியுள்ளார்.
விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருள்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில், விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு காவல்துறையில் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால் காவல்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
அரை நிர்வாணமாக உண்ணாவிரதப் போராட்டம்
இதைத்தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகர் திருச்சி - கரூர் பைபாஸ், மலர் சாலையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இன்று (அக்.12) முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை 46 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று அரை நிர்வாணமாக வீட்டில் பிரதான நுழைவு வாயில் கதவை பூட்டிக்கொண்டு சுற்றுச்சுவர் வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதையும் படிங்க:மாவோயிஸ்ட் பயங்கரவாத பயிற்சி: 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!