சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசி ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்பு தெரிவித்து அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒருபகுதியாக பொன்னமராவதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்த காவல் துறையினர் பொன்னமராவதியைச் சுற்றி உள்ள கிராமங்களில் தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவும் செய்தனர்.
இந்நிலையில் குற்றம்சாட்டிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தித்துப் பேசினார். அப்போது, 'ஏப்ரல் 18ஆம் தேதி எங்கள் சமுதாயப் பெண்கள் குறித்து வந்த தவறான தகவலால் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய சமுதாய மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம்.
மேலும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பியவர்களை காவல் துறையினர் உடனடியாக கண்டுபிடித்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்யப்பட்டப் பிறகே அவதூறு பரப்பியவர்களின் உள்நோக்கம் தெரியவரும்' என அவர் தெரிவித்தார்.