திருச்சி: கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கருமண்டபம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இன்று காலை 10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியது. இதில் பின் பக்க சாமியான பந்தல் சரிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். மேலும் மணிகண்டன் என்ற ஆசிரியருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: Tahdco: தாட்கோ கடன் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்.. மேனேஜர் அதிரடி கைது!
இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு பள்ளி நிர்வாகம் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தது. பின் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் லேசான காயம் ஏற்பட்ட மாணவர்களுக்குப் பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பெற்றோர்கள் மத்தியில் விபத்து குறித்த தகவல்கள் காட்டு தீயாக பரவியதால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குத் திரண்டு வந்தனர். தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்த பின் பெற்றோர் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் இன்று கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பள்ளிகல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஆதி திராவிடர் பள்ளி