வேளாண் சட்டங்களை திருப்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மனிதநேய மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். மயிலாடுதுறையில் இருந்து கோவை சென்ற ஜன சதாப்தி ரயிலை மனிதநேய மக்கள் கட்சியினர் மறிக்க திட்டமிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் சுமார் 100 காவலர்கள் கோட்டை ரயில் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் பாதுகாப்பு வளையத்தை உடைத்து மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் நிலையத்தில் பின் வழியாக ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்தனர். அதிர்ஷ்டவசமாக ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி விட்டார். இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 10 நிமிடம் தாமதமாக ஜனசதாப்தி ரயில் புறப்பட்டுச் சென்றது.
தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் உதுமான்அலி தலைமையிலான போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்காக போராட்ட கொடி தூக்கும் திமுக