திருச்சி: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு, அங்குள்ள மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இதனிடையே இந்திய நாட்டையே உலுக்கும் வகையில் இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆண்களால் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ பரவியதால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களையும், மணிப்பூர் கலவரத்தையும் நிறுத்தக் கோரி பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், திருச்சி பாலக்கரையில் நேற்று (ஜூலை 22) திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், கலவரத்தைத் தடுக்கத் தவறிய மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமானது மாநில பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை வைத்துக் கொண்டு கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் மற்றும் சிறுபான்மையின சமூக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினர்.
இதையும் படிங்க: மணிப்பூர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அப்துல் சமது கூறுகையில், ”மணிப்பூரில் மிக மோசமான குக்கி இன பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற காட்சிகள் மனித சமூகமே வெட்கி தலை குனியக் கூடிய ஒரு மோசமான நிகழ்வாக அமைந்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரங்கள் நடத்தப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டு 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் வாய் திறக்காதது கண்டனத்திற்குரியது.
மணிப்பூர் கலவரத்திற்கு உலகமே கண்டனத்தை தெரிவித்திருப்பது என்பது வெட்கப்படக்கூடியது. ஆனால், பிரதமர் 'மான் கி பாத்' 102வது நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு வார்த்தை கூட மணிப்பூர் கலவரம் பற்றிப் பேசவில்லை. இதில் உள்ள பின்னணியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மணிப்பூர் மக்களிடையே பிரிவினை மத வெறியை ஆர்எஸ்எஸ், பாஜக திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி உள்ளது. யார் பழங்குடி மக்கள் என அவரது வாழ்வு நிலை வைத்து கடந்த காலத்தில் அரசியல் நிர்ணய சபை தீர்மானம் செய்தது. இதற்கு பின்னனியில் உள்ள சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் இதற்குப் பதிலடியாக அமைய வேண்டும். அதற்கு பாஜக வீழ்த்தப்பட வேண்டும். மேலும் இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Manipur video: மணிப்பூர் சம்பவம் தொடர்பாக சிறார் உள்ளிட்ட மேலும் 2 பேர் கைது!