வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 68). இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பணியில் இருந்த காலத்தில் லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பாண்டியனுக்கு ஓராண்டு கால சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து பாண்டியன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக அவரை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டதன்பேரில், திங்கள்கிழமையன்று மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேலும், அவர் தன்னுடைய உடல் நலக்குறைவை கவனத்தில் கொண்டு, வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவப்பிரகாசம், பாண்டியனை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.