திருச்சி: துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் கடந்த 5ஆம் தேதி வீட்டில் இருந்து விளையாடச் சென்றபோது காணாமல் போனார். இதனையடுத்து, துறையூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக பள்ளியில் விசாரணை செய்தபோது, அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது; அதே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை சர்மிளா (26) என்பரும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், விசாரணையை துரிதப்படுத்தினர். காணாமல் போன ஆசிரியையின் தாயாரிடம் விசாரணை செய்தபோது, சர்மிளா அடிக்கடி மாணவருடன் செல்ஃபோனில் உரையாடி வந்ததாகவும், பல முறை அதட்டியும் அவர் கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.
செல்ஃபோன் எண்ணை ட்ரேஸ் செய்த போலீஸ் : இந்நிலையில், மாணவரும், ஆசிரியை சர்மிளாவும் ஒன்றாக சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நகர்த்தினர். இதனையடுத்து, ஆசிரியை சர்மிளாவின் செல்ஃபோன் எண்ணை காவல் துறையினர் ஆய்வு செய்த போது, அவர்கள் வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என மாவட்டங்கள் மாறிக்கொண்டே இருந்தது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியையின் செல்ஃபோன் சிக்னல் காட்டிய நிலையில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் நேற்று (25.03.2022) சென்றனர். அங்கு ஆசிரியை சர்மிளாவின் தோழி வீட்டில் மாணவருடன் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
ஆசிரியை போக்சோவில் கைது: பின்னர், இருவரையும் நேற்று துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவர்களிடம் பல கட்ட விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ஆசிரியை சர்மிளா, தஞ்சை பெரிய கோயிலில் வைத்து மாணவனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து, 17 வயது சிறுவனை கடத்திச் சென்று திருமணம் செய்ததற்காக சர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், மாணவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், சர்மிளாவை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலையில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நண்பர்களுக்கு போதைப்பொருள்கள் விநியோகம் - பட்டதாரி இளைஞர் கைது