திருச்சி: திருவானைக்காவல் சோதனைச்சாவடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஶ்ரீநாத் என்பவர், அவரது மனைவியுடன் காரில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து, கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் சுவரை இடித்துக் கொண்டு, சுமார் 50 அடி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்தத் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் இறந்தவர்களின் உடலையும், அந்தக் காரையும் மீட்டனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் உடைமைகளில் விமான நிலைய சீல் இருந்துள்ளது. இவர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும்போது, அதிகாலை நேரத்தில் கார் ஓட்டி வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் ஆய்வு மேற்கொண்டு, விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட திருச்சி விஜய் ரசிகர்கள்!