திருச்சி: தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் முடிவடைந்து 15 நாட்களுக்கு மேலாகிறது.
இந்நிலையில் நெற்பயிர்களுக்கு, மேல் உரம் இடும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு யூரியா அவசியம். ஆனால் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு இல்லை என்று கூறுவதாக தெரிகிறது. மற்ற அடி உரங்களான டிஏபி, வேப்பம் புண்ணாக்கு, ஜிப்சம், குப்பை உரம் போன்றவற்றை இருப்பு வைத்துள்ள கூட்டுறவு சங்கங்கள், மேலுரமான யூரியா இல்லை என்று கூறி கைவிரிக்கின்றனர்.
அதே சமயம் தனியார் கடைகளில் யூரியா விற்பனை செய்தாலும் மூட்டைக்கு 50 முதல் 80 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு மூட்டை யூரியா கூட்டுறவு சங்கத்தில் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தனியார் கடைகளில் 310 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் விவசாயிகளுக்கு தேவையான யூரியா கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து விவசாயி ராஜேந்திரன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், ”யூரியா பொறுத்தவரை திருச்சி மாவட்டத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து யூரியா தட்டுப்பாடு குறித்து மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எடுத்த நடவடிக்கையில் திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு 100 டன் யூரியா வழங்கப்பட்டது. தற்போது யூரியாவின் பயன்பாடுகள் இருப்பதால் அதிகளவில் யூரியா கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
மேலும் விவசாயி வீரசேகரன் பேசுகையில், ”திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை யூரியா மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யூரியா உரம் கூட்டுறவு சங்கத்தில் கிடைப்பதில் மிகப் பெரிய இடர்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் கடைகளில் வாங்கினால் ரூ.2,500 மேல் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகப்படியாக உரம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
குருவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நிலையில் கரும்பு, மற்றும் வாழை பொங்கல் விழாக்களுக்கு அறுவடைக்கு விடப்பட்டுள்ள நிலையில் யூரியா உரம் திருச்சி மாவட்டத்திற்கு பெருமளவில் தேவைப்படுகிறது. இந்த தேவையை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரத்தை கையிருப்பில் வைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: திருச்சி குகைக் கோயிலுக்கு ஆபத்து? கட்டுமானங்களை அகற்ற நீதிமன்றம் ஆணை!