வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் இத்தகைய விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்துவருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிரமாகச் சோதனையிட்டுவருவது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேஷன் பிரிவு கழிவறைத் தொட்டியில் தங்க நகைகள் கிடப்பதாக சுங்கத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்துசென்ற அலுவலர்கள் சுமார் ரூ.20.28 லட்சம் மதிப்பிலான 399 கிராம் தங்கத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் தங்கம் கடத்திவந்த பயணி சோதனைக்குப் பயந்து கழிவறை தொட்டியில் நகைகளை வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று காவல் துறை அலுவலர்கள் சந்தேகிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். இதன்மூலம் தங்கம் கடத்திவந்த பயணியை அடையாளம் காண அலுவலர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடப்பாவில் சர்வதேச செம்மரக்கடத்தல்காரர் உள்பட 17 பேர் கைது: 1.3 டன் செம்மரம் பறிமுதல்