திருச்சி: திருச்சி மாநகரில் பிரதான கடைவீதிகள், மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைகள் விற்பனை செய்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், திருச்சியில் உள்ள மலைக்கோட்டை கடைவீதி, பெரிய கடைவீதி , சின்ன கடைவீதி காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர் கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் அதிரடியாக சோதனை செய்தனர். அச்சோதனையில் தனுஷ், சகாய ஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டில் விற்பனைக்காக 108 பச்சைக்கிளிகள் மற்றும் 30 முனியாஸ் பறவைகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கிளிகள் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டுகள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பச்சைக் கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி கொடுத்தது கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் திருஞானம் வீட்டையும் சோதனை செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து 8 முனியாஸ் பறவைகள் மீட்டனர். மேலும் அவர் வேட்டைக்கு பயன்படுத்திய வலைகள், இரு சக்கர வாகனம் மற்றும் வலை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் மீது இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற உத்தர்வின் அடிப்படையில் திருச்சி மத்திய சிறையில் 15 நாள் அடைத்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் கிரண் கூறுகையில், "பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால், இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. பச்சை கிளிகளை விற்பதும், அதை வாங்குவதும் ஜாமினில் பெற முடியாத, 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.
மேலும் பச்சைக்கிளி விற்பனை குறித்து தகவல் ஏதும் தெரிந்தால், திருச்சி வனச் சரக அலுவலருக்கு (94436 49119) என்ற தொலபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் கொடுக்க வேண்டும். தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மிகப்பெரிய சோதனை இது தான்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: சிறுவன் உட்பட 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பு!