திருச்சி புத்தூர் ஆபிசர்ஸ் காலனி அட்சய அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சிராஜ்தீன் (53). புகைப்படக் கலைஞர். இவர் கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக நேற்றிரவு (ஏப்ரல் 25) சென்றார். அப்போது திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த முகமது தாவர் அலி என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தாவர் அலி, தான் வழக்கறிஞர் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிராஜ்தீன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சண்முகவேல் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அப்போது தாவர் அலி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் 100 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தாவர் அலி பி.எஸ்.சி., படித்துள்ளார் என்பதும், சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் வழக்கறிஞரை போல் உலா வந்ததும், அவரது முகநூல் கணக்கில் தமிழ்நாடு செய்தியாளர் என்று குறிப்பிட்டுள்ளதும் தெரியவந்தது.
இதனால் அவர் போலி செய்தியாளராகவும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தாவர் அலியை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.