திருச்சி: இந்தியாவில் அடுத்த ஆண்டு-2024 நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்பு திறந்து, தணிக்கை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ''திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2,544 வாக்கு மையங்கள் உள்ளன. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜூலை 4ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் சரி பார்க்கும் முதல்கட்டப் பணி தொடங்கப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Rope pulling: ரோப் புல்லிங் மரியாதை என்றால் என்ன?
வாக்குப்பதிவு நாளில் இயந்திரங்கள் திடீரென கோளாறு ஆவது மிக மிக குறைவு எனவும்; 0.01 சதவீதம் என்கிற அளவில் தான் இயந்திர கோளாறு திடீரென வருகிறது என்றார். பின்னர், 'அனைத்து மாவட்டங்களிலும் தேவையானதை விட 30 சதவீதம் கூடுதலாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் இருக்கிறது. ஏதாவது தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் அங்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்' எனக் குறிப்பிட்டார்.
தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதாகவும்; தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும் அறிவித்தார்.
தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும்; 17 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தகுதியுள்ள வாக்காளர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்றும்; தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் அலுவலர்களுக்கு இடையே நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போதே தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக, மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், தேவையான அளவுக்கு மாநிலங்களில் அவற்றை இருப்பு வைத்தல் ஆகிய பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை திருமங்கலம் சிக்னலில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்.. காவல் துறை பதில் என்ன?